யோவான் கிறிசோஸ்தோம்

புனித யோவான் கிறிசோஸ்தோம்
புனித பொன்வாய் அருளப்பர்
ஆயர் மற்றும் மறைவல்லுநர்
பிறப்பு சுமார். 347 [1]
அந்தியோக்கியா
இறப்பு 14 செப்டம்பர் 407 [2]
கோமானா, போன்தசு [2]
ஏற்கும் சபை/சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
ஆங்கிலிக்கம்
லூதரனியம்
திருவிழா கிழக்கு மரபுவழி திருச்சபை: 13 நவம்பர் (ஆயர்நிலை திருப்பொழிவு நாள்)
கத்தோலிக்க திருச்சபை:13 செப்டம்பர்
சித்தரிக்கப்படும் வகை ஆயர் உடையில் ஆசீர் வழங்குவது போன்று, நற்செய்தி அல்லது மறைநூலைத் தாங்கிய படி. தேனீக்களின் கூடு, வெள்ளை புறா, [3] விவிலியம், எழுதுகோல்
பாதுகாவல் காண்ஸ்டாண்டிநோபுள், கல்வி, விழுநோயாளிகள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள் [3]


புனித யோவான் கிறிசோஸ்தோம் அல்லது புனித பொன்வாய் அருளப்பர் (சுமார். 347–407, கிரேக்க மொழி: Ἰωάννης ὁ Χρυσόστομος), காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயராக இருந்தவர். இவர் மிக முக்கியமான திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராவார். இவர் பெரிய எழுத்தாளர், மறையுரையாளர், விவிலிய விரிவுரையாளர். இறையியலாளர். இவரால் திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இவரது மறை உரையின் மேன்மையினை உனர்த்தும் விதமாக மக்கள் இவரை பொன்வாய் என்னும் பொருள்படும்படி கிரேக்கத்தில் கிறிசோஸ்தோமோஸ் என அழைத்தனர். இதுவே பிற்காலத்தில் இவரின் பெயர் ஆயிற்று. [2] [4]

வரலாறு

கி.பி.347ம் ஆண்டில் ரோமானியப் படைத் தளபதிக்கும், கிரேக்கப் பெண்மணிக்கும் மகனாகப் அந்தியோக்கியாவில் பிறந்த கிறிஸ்சோஸ்தம் நல்ல கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். இவருக்கு 23 வயதாகும்போது, அதுவரை பயின்று வந்த கிரேக்கப் பாடங்களிலிருந்து மாற்றி, விவிலியத்தைப் படிக்க இவரைத் தூண்டினார் இவரது நண்பரான புனித பாசில். தவவாழ்வு நடத்த விரும்பி 375ம் ஆண்டில் அந்தியோக்கியாவுக்கு அருகிலிருந்த மலைக்குச் சென்றார். ஆயினும், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் 386ம் ஆண்டில் அந்தியோக்கியா திரும்பி வந்து குருப்பட்டம் பெற்றார்.

கான்ச்டண்டிநோப்புளின் ஆயராக

397ம் ஆண்டில் பேரரசர் ஆர்கேடியஸ், யாருக்கும் தெரியாமல் இவரைக் கான்ச்டண்டிநோப்புளுக்கு வரவழைத்து இவரை ஆயராக நியமித்தார். திருமறை அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில் இப்பொறுப்பை ஏற்றார். ஆயரானதும் சீர்திருத்தப்பணிகளில் இறங்கினார். ஆயர் இல்லத்தில் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தார். ஆயர் இல்லத்தின் ஆடம்பர வாழ்வை முற்றிலும் மாற்றினார். அடிக்கடி விருந்துகள் வைப்பதைத் தவிர்த்தார். இவரே படிக்கட்டுகளைச் சுத்தம் செய்யத் தொடங்கினார். ஆயர் இல்லத்தில் பெண்கள் வேலை செய்வதை முதலில் நிறுத்தினாலும், பின்னர் அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் கன்னிமை வாக்குறுதியைக் கொடுக்கச் செய்தார். இவர் ஆயராகப் பொறுப்பேற்றபோது கான்ஸ்டான்டிநோபிள் நகரில் எண்ணற்ற துறவிகள் இருந்தனர். இவர்களில் துறவிக்குரிய வாழ்க்கை வாழாமல் வீணாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவர்களைத் துறவு மடங்களுக்கு அனுப்பி வைத்தார். ஆடம்பர வாழ்வு வாழ்ந்து பிறருக்குத் கெட்ட எடுத்துக்காட்டாக இருந்த குருக்களைக் கண்டித்தார். கொலை மற்றும் விபச்சாரக் குற்றம் புரிந்த குருக்களை குருத்துவநிலையிலிருந்து விலக்கினார்.

யோவான் கிறிசோஸ்தோம், யுடோக்சியா பேரரசியை கன்டித்தல்

இவரது மறை போதனைகளும், இவர் எழுதியப் புத்தகங்களும் பலரையும் நல வழிப் படுத்தியதாகக் கூறப்படுகின்றது. பணக்காரர்களின் அர்த்தமற்ற ஆடம்பரச் செலவுகளைக் கண்டித்தார். பணக்காரப் பெண்களின் வீண்பெருமையைச் சாடினார். அவர்கள் உடை அணிவதில் அடக்கத்தை வலியுறுத்தினார். ஏழைகள்மீது அக்கறை காட்டினார். இதுபோன்ற பல நடவடிக்கைகளால் அலெக்சாந்திரியா முதுபெரும் தலைவர் தெயோபிலஸ் உட்பட சில திருச்சபையின் அதிகாரிகள் மற்றும் உயர் பதவியிலிருந்தவர்கள் இவருக்கு எதிரிகளானார்கள். இவர்களில் யுடோக்சியா என்ற பேரரசி இவருக்குக் கடும் எதிரியானார். இவரின் மறையுரைகள் இந்தப் பேரரசிக்குப் பிடிக்கவில்லை. இவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் பலக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் பேரரசி. அதனால் அரன் இவரை நாடு கடத்த ஆனையிட்டான். இதைக் கேள்விப்பட்ட மக்கள் வேகுண்டேழுந்ததைக் கண்டு இந்த முயற்சி கைவிடப் பட்டது.

இறப்பு

இவரின் கத்தீடிரலுக்கு வெளியே அரிசி யுடோக்சியாவின் வெள்ளி சிலை நிருவப்பட்டு அதன் திரப்பு விழாவுக்கு இவர் அழைக்கப்பட்டர். ஆனால் இவர் அரசியின் ஆடம்பரசெயலை கடுமையாக சாடினார். அதனால் இவரை அர்மேனியாவுக்கு நாடு கடத்தினர். அப்போதைய திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் இவருக்கு ஆதரவாக இருந்தது அரசனின் செயலை வன்மையாக கண்டித்தார்.

அவரை அந்தப் பேரரசின் கடைகோடியிலிருந்த பைதியுசுக்கு மீண்டும் நாடு கடத்தினர். அவ்விடத்துக்கு இரண்டு படைவீரர்களால் நடக்க வைத்தே அழைத்துச் செல்லப்பட்டார். இரவில் குளிரிலும், பகலில் வெயிலிலும் மழையிலும் நீண்டதூரம் நடக்க வைக்கப்பட்டார். ஏற்கனவே நலிந்திருந்த இவரது உடல் தாங்கவில்லை. கி.பி.407ம் ஆண்டு செப்டம்பர் 14ம்தேதி இவரால் நடக்கவே முடியவில்லை. இனிமேல் நடக்க முடியாது என அந்தப் படைவீரர்களிடம் கூறியும், அவர்கள் அதற்கு இணங்காமல் மீண்டும் ஆயரைக் கட்டாயப்படுத்தி நடக்க வைத்தனர். அவரது உடல்நிலை மோசமாகவே கோமனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அதே நாளில் தனது 52வது வயதில் இறந்தார். எல்லாவற்றிலும் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக என்ற வார்த்தைகளைச் சொல்லி இவர் காலமானார்.

யோவான் கிறிசோஸ்தோமின் உடல் கான்ச்டண்டிநோப்புளின் திருத்தூதர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்படல்

இந்தப் புனிதர் இறந்து 31 ஆண்டுகள் கழித்து, பேரரசி யுடோக்சியாவின் பிள்ளைகளான அரசி புனித புல்கேரியாவும், அரசர் 2வது தியேடோசியசும் தம் பெற்றோரின் செயல்களூக்கு மனம் வருந்தி தவம் செய்தனர். புனிதரின் உடலை கி.பி.438ம் ஆண்டு சனவரி 27ம் நாளன்று மிக ஆடம்பரமாக கான்ச்டண்டிநோப்புளின் திருத்தூதர் ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்கே அடக்கம் செய்தனர். ஊர்வலத்தில் சவப்பெட்டியை இவர்கள் தாங்கிச் சென்றனர்.

இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதராகவும், திருச்சபையின் மறைவல்லுனராகவும் கருதப்படுகிறார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 13 செப்டம்பர். கிழக்கு மரபுவழி திருச்சபையில், இவர் காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்ட நாளான 13 நவம்பரில் இவரின் விழா நாளை நினைவு கூர்கின்றனர்.

Other Languages
asturianu: Xuan Crisóstomu
azərbaycanca: İohann Xrisostom
беларуская: Іаан Златавуст
български: Йоан Златоуст
čeština: Jan Zlatoústý
Cymraeg: Ioan Aurenau
français: Jean Chrysostome
hrvatski: Ivan Zlatousti
Bahasa Indonesia: Yohanes Krisostomus
latviešu: Joans Hrizostoms
Bahasa Melayu: John Chrysostom
norsk nynorsk: Johannes Chrysostomos
português: João Crisóstomo
srpskohrvatski / српскохрватски: Jovan Hrizostom
Simple English: John Chrysostom
slovenčina: Ján Zlatoústy
slovenščina: Janez Zlatousti
српски / srpski: Јован Златоусти
Tiếng Việt: Gioan Kim Khẩu