முதலாம் உலகப் போர்

முதலாம் உலகப் போர்
காலம்28 ஜூலை 191411 நவம்பர் 1918
இடம்ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்)
அணிகள்
நேச நாடுகள்:
ரஷ்யப் பேரரசு
பிரான்ஸ்
பிரித்தானியப் பேரரசு
இத்தாலி
ஐக்கிய அமெரிக்கா

மற்றும் பல.

மைய நாடுகள்:
ஆஸ்திரியா-ஹங்கேரி
ஜேர்மன் பேரரசு
ஓட்டோமான் பேரரசு
பல்கேரியா
தலைவர்கள்
நிக்கோலாஸ் II
அலெக்சேய் புருசிலோவ்
ஜார்ஜஸ் கிளெமென்சியு
ஜோசப் ஜோப்ரே
பேர்டினண்ட் ஃபோக்
ராபர்ட் நிவேலே
Philippe Petain
மன்னர் ஜார்ஜ் V
ஹெர்பேர்ட் எச். அஸ்குயித்
டே. லாயிட் ஜார்ஜ்
டக்ளஸ் ஹேக்
ஜான் ஜெலிக்கோ
விக்டர் இம்மானுவேல் III
லுய்கி கடோர்னா
ஆர்மண்டோ டயஸ்
வூட்ரோ வில்சன்
ஜான் பேர்ஷிங்
பிராண்ஸ் ஜோசப் I
Conrad von Hötzendorf
வில்ஹெல்ம் II
எரிக் வொன் பால்கென்ஹெயின்
பால் வொன் ஹின்டென்பர்க்
ரெயின்ஹார்ட் ஸ்கீர்
எரிக் லுடெண்டார்ஃப்
மெஹ்மெட் V
இஸ்மாயில் என்வர்
முஸ்தாபா கெமால்
பேர்டினண்ட் I
இழப்புக்கள்
இறந்த படையினர்:
5,525,000
காயமுற்ற படையினர்: 12,831,500
காணாமல்போன படையினர்: 4,121,000[1]
இறந்த படையினர்:
4,386,000
காயமுற்ற படையினர்: 8,388,000
காணாமல்போன படையினர்: 3,629,000[1]

முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இதன் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின. போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப் போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.

இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, உதுமானிய பேரரசு என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின. செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. மீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான நாடுகளின் சங்கம் (League of Nations) ஒன்று உருவானது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.

1871 ஆம் ஆண்டில் ஜேர்மனி ஒருங்கிணைக்கப்பட்டதும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்கட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப் போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களுள் அடங்கும். இவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜேர்மனிக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே பொருளியல், படைத்துறை, குடியேற்றங்கள் தொடர்பான போட்டிகள்; பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி தொடர்ச்சியான உறுதியற்ற நிலையில் இருந்தமை என்பனவும் இப் போருக்கான மேலதிக காரணங்களாகும்.

ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், காவ்ரீலோ பிரின்சிப்,செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது ஆஸ்திரியா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது. சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன. ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. ஓட்டோமான் பேரரசு 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. போர் விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும்.

போர் பெரும்பாலும் ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் இடம்பெற்றது. மேற்கு முனை எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தது[2]. இவ்வரண்கள் 475 மைல்கள் தூரத்துக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) அமைந்திருந்தன[2]. இது பதுங்கு குழிப் போர் என அழைக்கப்படலாயிற்று. கிழக்குப் போர் முனை பரந்த வெளிகளைக் கொண்டிருந்ததாலும், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு அதிகம் இல்லாதிருந்ததாலும் மேற்கு முனையைப்போல் யாருக்கும் வெற்றியில்லாத நிலை காணப்படவில்லை. எனினும் போர் தீவிரமாகவே நடைபெற்றது. பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்றது. அத்துடன், கடலிலும், வானிலும் சண்டைகள் இடம்பெற்றன.

காரணங்கள்

கூட்டணிகள்

1914 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி பாஸ்னிய சேர்பிய மாணவனான காவ்ரிலோ பிரின்சிப் என்பவன் ஆஸ்திரோ ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசரான ஆர்ச்டியூக் பிராண்ஸ் பேர்டினண்டை சரயேவோவில் வைத்துச் சுட்டுக் கொன்றான். பிரின்சிப், தெற்கு சிலாவியப் பகுதிகளை ஒன்றிணைத்து அதனை ஆஸ்திரோ ஹங்கேரியில் இருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட இளம் பாஸ்னியா என்னும் அமைப்பின் உறுப்பினன். சரயேவோவில் நடைபெற்ற இக் கொலையைத் தொடர்ந்து மிக வேகமாக நடந்தேறிய நிகழ்வுகளைத் தொடர்ந்து முழு அளவிலான போர் வெடித்தது.[3] ஆஸ்திரோ ஹங்கேரி இக் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சேர்பியாவைக் கோரியது. எனினும், சேர்பியா இதற்குச் செவிசாய்க்கவில்லை எனக் கருதிய ஆஸ்திரோ ஹங்கேரி சேர்பியா மீது போர் தொடுத்தது. ஐரோப்பிய நாடுகளிற் பல கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றுடன் ஒன்று செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் காரணமாகவும், சிக்கலான பன்னாட்டுக் கூட்டணிகள் காரணமாகவும் பெரும்பாலான அந்த நாடுகள் போரில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது.

ஆயுதப் போட்டி

ராயல் கடற்படையின் எச்எம்எஸ் டிரெட்நோட்.

ஜெர்மனிக்கு, பிரித்தானியாவைப் போல பெரிய பேரரசின் வணிகச் சாதகநிலை இல்லாமல் இருந்தபோதும், 1914 ஆம் ஆண்டளவில் அந் நாட்டின் தொழில்துறை பிரித்தானியாவினதைக் காட்டிலும் பெரிதாகி விட்டது. இதனால், தத்தமது கடற்படைகளை வலுவாக வைத்திருக்கவேண்டி போருக்கு முந்திய ஆண்டுகளில் இரு நாடுகளும் பெருமளவிலான போர்க் கப்பல்களைக் கட்டின. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இந்தக் கடற்படைப் போட்டி 1906 ஆம் ஆண்டளவில் எச்எம்எஸ் டிரெட்நோட் (HMS Dreadnought) என்னும் போர்க்கப்பலின் வெள்ளோட்டத்துடன் மேலும் தீவிரமானது. இப் போர்க் கப்பலின் அளவும், வலுவும் இதற்கு முந்திய கப்பல்களை காலம் கடந்தவை ஆக்கின. பிரித்தானியா பிற துறைகளிலும் தனது கப்பற்படையின் முன்னணி நிலையைப் பேணிவந்தது.

டேவிட் ஸ்டீவன்சன் என்பார் இந்த ஆயுதப் போட்டியை, தன்னைத்தானே சுழல்முறையில் வலுப்படுத்திக்கொண்ட உச்சநிலையிலான படைத்துறைத் தயார்நிலை என விளக்கினார்."[4] டேவிட் ஹெர்மான் கப்பல் கட்டும் போட்டியை போரை நோக்கிய ஒரு நகர்வாகவே பார்த்தார்.[5] எனினும் நீல் பெர்கூசன் என்பார், பிரித்தானியா தனது முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வலிமையைக் கொண்டிருந்ததால், ஏற்படவிருந்த போருக்கான காரணமாக இது இருக்க முடியாது என வாதிட்டார்.[6] இந்த ஆயுதப் போட்டிக்கான செலவு பிரித்தானியா, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தின. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகிய பெரிய வல்லரசுகளின் ஆயுதங்களுக்கான மொத்தச் செலவு 1908 க்கும் 1913 க்கும் இடையில் 50% கூடியது.[7]

திட்டங்கள், நம்பிக்கையின்மை, படைதிரட்டல்

போருக்குச் செல்லும் வழியில் பிரான்சின் கனரக குதிரைப்படையினர், மார்புக் கவசங்களையும் தலைக் கவசங்களையும் அணிந்தபடி, பாரிஸ் நகரில் அணிவகுத்துச் செல்கின்றனர், ஆகஸ்ட் 1914.

ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட படைதிரட்டல் திட்டங்கள் பிணக்குகளைத் தாமாகவே தீவிரமாக்கின எனப் பல அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பல மில்லியன் கணக்கான படையினரைச் செயற்படவைத்தல், நகர்த்துதல், வசதிகள் அளித்தல் போன்றவற்றின் சிக்கலான தன்மைகளினால், தயார்ப் படுத்துதலுக்கான திட்டங்களை முன்னராகவே தொடங்கவேண்டி இருந்தது. இத்தகைய தயார்ப்படுத்தல் உடனடியாகவே தாக்குதலை நடத்தவேண்டிய நிலையையும் நாடுகளுக்கு ஏற்படுத்தியது.

குறிப்பாக, ஃபிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) என்னும் வரலாற்றாளர் ஜேர்மனியின் ஸ்கீல்பென் திட்டத்தின் உள்ளார்ந்த தீவிரத்தன்மை பற்றி எடுத்துக்காட்டினார். ஜேர்மனிக்கு இரண்டு முனைகளில் போரிடவேண்டிய நிலை இருந்ததனால் ஒருமுனையில் எதிரியை விரைவாக ஒழித்துவிட்டு அடுத்த முனையில் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருந்தது. இதனால், வலுவான தாக்குதல் ஒன்றின் மூலம் பெல்ஜியத்தைக் கைப்பற்றிக்கொண்டு, பிரான்சின் படைகள் தயாராகுமுன்பே அதனைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதும் திட்டமாக இருந்தது. இதன் பின்னர் ஜேர்மன் படையினர் தொடர்வண்டிப் பாதை வழியாகக் கிழக்கு நோக்கிச் சென்று மெதுவாகத் தயாராகிக் கொண்டிருக்கும் ரஷ்யப் படைகளை அழிப்பது திட்டம்.

பிரான்சின் திட்டம் 17, ஜேர்மனியில் தொழிற்றுறை மையமான ரூர் பள்ளத்தாக்கைத் (Ruhr Valley) தாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கோட்பாட்டு அடிப்படையில் இது, ஜேர்மனி நவீன போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஒழித்துவிடும்.

ரஷ்யாவின் திட்டம் 19, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனி, ஓட்டோமான்கள் ஆகியோருக்கு எதிராக ஒரே நேரத்தில் தாக்குதல்களைத் தொடங்க வேண்டுமென எதிர்பார்த்தது. எனினும், திருத்தப்பட்ட திட்டம் 19 இன் படி ஆஸ்திரியா-ஹங்கேரியே முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் கிழக்குப் பிரசியாவுக்கு எதிராகப் படைகளை அனுப்புவதற்கான தேவை குறைகின்றது.

மூன்று திட்டங்களுமே விரைவாகச் செயற்படுவது வெற்றியை முடிவு செய்யும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. விரிவான கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டன. போருக்கான ஆயத்தங்கள் தொடங்கிய பின் திரும்பிப் பார்க்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு.

இராணுவவாதமும் வல்லாண்மையும்

முன்னாள் ஐக்கிய அமெரிக்க சனாதிபதியான வூட்ரோ வில்சனும், வேறு சிலரும் போருக்கான காரணமாக இராணுவவாதத்தைக் (militarism) குற்றம் சாட்டினர்.[8] ஜேர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி போன்ற நாடுகளில் வல்லாண்மை வாதிகளும், படைத்துறைத் தலைவர்களும் கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், சனநாயகத்தை அமுக்கிவிட்டு இராணுவ அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான அவர்களின் ஆசையின் விளைவே போர் என்றும் சிலர் கூறுகின்றனர்.[9] இந்தக் கருத்து ஜேர்மனிக்கு எதிரான பரப்புரைகளில் பெரிதும் பயன்பட்டது.[10][11] 1918 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியின் முயற்சிகள் தோல்வியடையத் தொடங்கியபோது இரண்டாம் கெய்சர் வில்கெல்ம் போன்ற தலைவர்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அத்துடன், இராணுவவாதமும், வல்லாண்மையியமும் (aristocracy) முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கைகளும் உருவாகின. இந்த அடிப்படை 1917 ல் ரஷ்யா சரணடைந்ததன் பின்னர், அமெரிக்கா போரில் பங்குபற்றுவதற்கான நிலைமையைத் தோற்றுவித்தது.[12]

நேச நாடுகளின் கூட்டணியின் முக்கிய பங்காளிகளான பெரிய பிரித்தானியாவும், பிரான்சும் மக்களாட்சியைக் கொண்ட நாடுகள். இவை ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஓட்டோமான் பேரரசு போன்ற சர்வாதிகார நாடுகளுடன் போரிட்டன. நேச நாடுகளில் ஒன்றாகிய ரஷ்யா 1917 ஆம் ஆண்டு வரை ஒரு பேரரசாக இருந்தது, எனினும் அது ஆஸ்திரியா-ஹாங்கேரியினால் சிலாவிய மக்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்தது. இப் பின்னணியில் இப் போர் தொடக்கத்தில் சனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராகவே பார்க்கப்பட்டது. எனினும், போர் தொடர்ந்தபோது இது அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.

நாடுகளின் சங்கமும் (League of Nations), ஆயுதக்குறைப்பும் உலகிக் நிலைத்த அமைதியை ஏற்படுத்தும் என வில்சன் நம்பினார். எச். ஜி. வெல்ஸ் என்பாரின் கருத்தொன்றைப் பின்பற்றி போரை, "எல்லாப் போர்களையும் முடித்து வைப்பதற்கான போர்" என விபரித்தார். பிரித்தானியாவும், பிரான்சும் கூட இராணுவவாதத்தில் சிக்கியிருந்த போதும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை அடைவதற்காக, அவர்களுடன் சேர்ந்து போரிட அவர் தயாராக இருந்தார்.

பிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) போருக்காகப் பெரும்பாலும் ஜேர்மனியின் வல்லாண்மைவாதத் தலைவர்களையே குற்றஞ்சாட்டினார்[13]. ஜேர்மனியின் சமூக சனநாயகக் கட்சி பல தேர்தல்களில் வெற்றிபெற்று இருந்தது. அவர்களுடைய தங்களுடைய வாக்கு விகிதத்தை அதிகரித்து 1912 ஆம் ஆண்டில் பெரும்பான்மைக் கட்சியானது. எனினும் திரிவு செய்யப்பட்ட அவைகளுக்கு, கெய்சருடன் ஒப்பிடும்போது குறைவான அதிகாரங்களே இருந்தன. இச் சூழலில் ஒருவகையான அரசியல் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அஞ்சப்பட்டது. ரஷ்யாவிலும் படைப் பெருக்கமும், 1916-1917 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய சீர்திருத்த நடைவடிக்கைகளும் நடந்து வந்தன. இவைகளுக்கு முன்பே போரில் ரஷ்யா தோல்வியுற்று, ஜேர்மனி ஒன்றிணைக்கப்படக் கூடிய நிலை இருந்தது. தனது பிந்திய ஆக்கங்களில், ஜேர்மனி 1912 ஆம் ஆண்டிலேயே போரைத் திட்டமிட்டு விட்டதாக பிஷர் வாதித்தார்[14].

வரலாற்றாளரான சாமுவேல் ஆர். வில்லியம்சன் போரில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் பங்களிப்பை வலியுறுத்தினார். சேர்பியத் தேசியவாதமும், ரஷ்யாவுக்கு பால்க்கன் பகுதி தொடர்பில் இருந்த குறிக்கோள்களும், 17 வெவ்வேறு நாட்டினங்களைக் கொண்டிருந்த முடியாட்சியைச் சீர்குலைத்ததாக அவர் கருதினார். ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட போரையே எதிர்பார்த்தது என்றும், வலுவான ஜேர்மனியின் ஆதரவு ரஷ்யாவைப் போரிலிருந்து விலக்கி வைத்து பால்கனில் அதற்கு இருக்கும் கௌரவத்தைக் குறைக்கும் என அது எண்ணி இருந்ததாகவும் அவர் கருத்து வெளியிட்டார்[15].

அதிகாரச் சமநிலை

போருக்கு முந்திய ஐரோப்பியப் படைத்துறைக் கூட்டணிகள்.

போருக்கு முந்திய காலத்தில் வல்லரசுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளின் இலக்கு அதிகாரச் சமநிலையைப் பேணிக் கொள்வதாகும். இது, வெளிப்படையானதும், இரகசியமானதுமான கூட்டணிகளையும், ஒப்பந்தங்களையும் உள்ளடக்கிய விரிவான வலையமைப்புக்களோடு தொடர்புபட்டது. எடுத்துக் காட்டாக பிராங்கோ-பிரஷ்யப் போருக்குப் (1870–71) பின்னர், தனது மரபுவழியான எதிரியான பிரான்சின் பலத்தைச் சமப்படுத்துவதற்கு வலுவான ஜெர்மனியைப் பிரித்தானியா விரும்பியது. ஆனால், பிரித்தானியாவின் கடற்படைக்குச் சவாலாக ஜேர்மனி தனது கப்பற்படையைக் கட்டியெழுப்ப முற்பட்டபோது, பிரித்தானியா தனது நிலையை மாற்றிக்கொண்டது. ஜேர்மனியின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காகத் துணை தேடிய பிரான்ஸ், ரஷ்யாவைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனியின் ஆதரவை நாடியது.

முதல் உலகப் போர் தொடங்கிய பின்னர், இவ்வாறான ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு மட்டுமே எந்தநாடு எந்தப் பக்கத்துக்குச் சார்பாகப் போரிட்டது என்பதை முடிவு செய்தது. இத்தாலி, ஆஸ்திரியா-ஹங்கேரியுடனும், ஜேர்மனியுடனும் ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. எனினும் அது அந் நாடுகளுக்குச் சார்பாகப் போரில் இறங்கவில்லை. அது பின்னர் நேச நாடுகளுக்கு ஆதரவாக இருந்தது. எல்லாவற்றிலும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் ஜேர்மனிக்கும், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் இடையே முதலில் தற்பாதுகாப்புக்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இதனை 1909 ஆம் ஆண்டில் ஜேர்மனி விரிவுபடுத்தி, ஆஸ்திரியா-ஹங்கேரி போரைத் தொடங்கினாலும் கூட ஜேர்மனி அதன் பக்கம் இருக்கும் என உறுதி கூறியது[16].

பொருளியல் பேரரசுவாதம்

விளாடிமிர் லெனின் பேரரசுவாதமே போருக்கான காரணம் எனக் குறிப்பிட்டார். இவர் கார்ல் மார்க்ஸ், ஆங்கிலப் பொருளியலாளரான ஜான் ஏ. ஹொப்சன் ஆகியோரின் பொருளியல் கோட்பாடுகளை எடுத்துக் காட்டினார்.[17] இவர்கள், விரிவடையும் சந்தைகளுக்கான போட்டி உலகளாவிய பிணக்குகளை உருவாக்கும் என்று எதிர்வு கூறியிருந்தனர். பிரித்தானியாவின் முதன்மையான பொருளியல் நிலை, செருமானியத் தொழில் துறையின் விரிவான வளர்ச்சி அச்சுறுத்தியது என்றும், பெரிய பேரசு ஒன்றின் சாதகநிலை செருமனிக்கு இல்லாத காரணத்தால், அது செருமானிய மூலதனங்களுக்கான இடங்களுக்காகப் பிரித்தானியாவுடன் தவிர்க்கமுடியாதபடி போரிட வேண்டியிருந்தது என்றும் லெனின் எடுத்துக் காட்டினார். இவ் வாதம் போர்க்காலத்தில் பெரிதும் பெயர் பெற்றிருந்ததுடன், பொதுவுடமையியத்தின் வளர்ச்சிக்கும் துணையாக இருந்தது.

வணிகத் தடைகள்

அமெரிக்காவில் பிராங்க்லின் ரோஸ்வெல்ட்டின் கீழ் உள்நாட்டுச் செயலாளராக இருந்த கோர்டெல் ஹல் என்பார், வணிகத் தடைகளே முதல் உலகப் போர், இரண்டாம் உலகபோர் இரண்டுக்குமான அடிப்படைக் காரணங்கள் என நம்பினார். 1944 ஆம் ஆண்டில், பிணக்குகளுக்குக் காரணங்கள் என அவர் நம்பிய வணிகத் தடைகளைக் குறைப்பதற்காக பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தத்தை உருவாக்குவதில் உதவினார்.[18][19]

இன, அரசியல் போட்டிகள்

பால்க்கன் பகுதிகளில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் செல்வாக்குக் குறைந்து, பரந்த-சிலேவியா இயக்கம் வளர்ச்சி பெற்றுவந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும், சேர்பியாவுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாததெனவே கருதப்பட்டது. ஆஸ்திரிய எதிர்ப்பு உணர்வு அதிகமாகக் காணப்பட்ட சேர்பியாவின் வளர்ச்சியுடன் இனவழித் தேசியம் பொருந்தி வந்தது. ஆஸ்திரியா-ஹங்கேரி, முன்னைய ஓட்டோமான் பேரரசின் மாகாணமாக இருந்ததும், சேர்பியர்கள் அதிகம் வாழ்ந்து வந்ததுமான பொஸ்னியா-ஹெர்சகொவினாவை 1878 ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டது. 1908 ஆம் ஆண்டில் இது முறையாக ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் இணைக்கப்பட்டது. அதிகரித்து வந்த இன உணர்வுகளின் வளர்ச்சி, ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியுடனும் பொருந்தி வந்தது. இன மற்றும் மதப் பிணைப்புக்கள் காரணமாகவும், கிரீமியப் போர்க் காலத்திலிருந்து ஆஸ்திரியாவுடன் இருந்து வந்த போட்டி காரணமாகவும், ரஷ்யா பரந்த-சேர்பியா இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. தோல்வியடைந்த ரஷ்ய-ஆஸ்திரிய ஒப்பந்தம், நூற்றாண்டுகளாக பால்க்கன் பகுதித் துறைமுகங்கள் மீது ரஷ்யாவுக்கு இருந்த ஆர்வம் என்பனவும் இதற்கான காரணங்களாக இருந்தன.[20]

Other Languages
Alemannisch: Erster Weltkrieg
žemaitėška: Pėrma svieta vaina
беларуская (тарашкевіца)‎: Першая сусьветная вайна
qırımtatarca: Birinci Cian cenki
emiliàn e rumagnòl: Prémma guèra mundièl
English: World War I
Esperanto: Unua mondmilito
estremeñu: I Guerra Mundial
Nordfriisk: Iarst Wäältkrich
Gàidhlig: An Cogadh Mòr
客家語/Hak-kâ-ngî: Thi-yit-chhṳ Sṳ-kie Thai-chan
Fiji Hindi: World War I
Bahasa Indonesia: Perang Dunia I
Patois: Wol Waar I
Basa Jawa: Perang Donya I
къарачай-малкъар: Биринчи дуния къазауат
Lëtzebuergesch: Éischte Weltkrich
Bahasa Melayu: Perang Dunia Pertama
မြန်မာဘာသာ: ပထမ ကမ္ဘာစစ်
مازِرونی: جهونی جنگ اول
Dorerin Naoero: Eaket Eb I
Plattdüütsch: Eerste Weltkrieg
Nedersaksies: Eerste Wealdkrieg
नेपाल भाषा: तःहताः १
norsk nynorsk: Den fyrste verdskrigen
srpskohrvatski / српскохрватски: Prvi svjetski rat
Simple English: World War I
slovenščina: Prva svetovna vojna
Soomaaliga: Dagaalkii koowaad
српски / srpski: Први светски рат
Basa Sunda: Perang Dunya I
Türkmençe: Birinji jahan urşy
ئۇيغۇرچە / Uyghurche: بىرىنچى دۇنيا ئۇرۇشى
oʻzbekcha/ўзбекча: Birinchi jahon urushi
vepsän kel’: Ezmäine mail'man voin
Volapük: Volakrig balid