புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்
[[Image: புதுமைப்பித்தன்|100x150px|alt=]]
பிறப்பு சொ. விருத்தாசலம்
ஏப்ரல் 25, 1906(1906-04-25)
திருப்பாதிரிப்புலியூர்
இறப்பு சூன் 30, 1948(1948-06-30) (அகவை 42) [1]
திருவனந்தபுரம்
நாட்டுரிமை இந்தியா
கல்வி கலைத்துறை இளமாணிப் பட்டம்
கல்வி நிலையம் நெல்லை இந்துக் கல்லூரி
எழுதிய காலம் 1933-1948
இலக்கிய வகை சிறுகதை
இயக்கம் மணிக்கொடி இயக்கம், நவீன தமிழ் இலக்கியம்
துணைவர்(கள்) கமலா
பிள்ளைகள் தினகரி

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் ( ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். [2] கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. [3] [4] [5] [6]

வாழ்க்கைக் குறிப்பு

மணிக்கொடி இதழ்

புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார். [7] [8] [9]

இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். இந்தக் காலகட்டத்தில் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார். [8]

இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி மே 5, 1948-இல் காலமானார். [8] [10]