பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

பண்டைய ஒலிம்பியா குறித்த ஓவியர் ஒருவரின் கற்பனை

பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Ancient Olympic Games) பண்டையக் கிரேக்கத்தில் நகர அரசுகளுக்கிடையேயான தொடர்ச்சியான தட கள விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளைக் குறிக்கின்றன. இவை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (கிரேக்க மொழி: Ολυμπιακοί Αγώνες; Olympiakoi Agones) என அழைக்கப்பட்டு வந்தன; கிரேக்கத் தொன்மவியலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் போட்டிகள் கிரேக்கக் கடவுள் சூசுவின் நினைவாக நடைபெற்றன. தற்காலத்தில் மீளமைவு செய்யப்பட்டிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இவையே முதன்மை கருத்துருக்களாக அமைந்தன. பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் கி.மு 776 இல் துவங்கின. தொடர்ந்து உரோமை ஆட்சியிலும் இவை கொண்டாடப்பட்டு வந்தன. கி.பி 393இல் உரோமையரசர் தியோடோசியசு ஆட்சிக்காலத்தில் கிறித்தவத்தை அரச மதமாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இவை நிறுத்தப்பட்டன.[1]போட்டிகளுக்கான பரிசுப் பொருட்களாக சைத்தூன் வளையங்கள், பனைக்கிளைகள் மற்றும் கம்பளி நாடாக்கள் வழங்கப்பட்டன.இந்தப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றதால் ஒலிம்பியாட் என்றழைக்கப்பட்ட இத்தொகுதி வரலாற்று நேரக்கோடுகளில் நான்காண்டு காலத்திற்கான ஓர் கால அளவையாக மாறியது.

விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் காலத்தில் ஒலிம்பிக் அமைதி உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது; இதனால் விளையாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளிலிருந்து பாதுகாப்பாக பயணிக்க முடிந்தது. தங்கள் எதிரிகளை விட சிறந்தவர்களாகக் காட்டிட நகர அரசுகள் இதன கருவியாகப் பயன்படுத்தினர். இதனால் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே இக்காலத்தில் கூட்டணி ஏற்பட்டன. மதகுருக்கள் வெற்றிக்காக பலி கொடுத்தனர். நிலநடுக்கடல் மண்டலத்தில் எல்லீனிய பண்பாட்டை பரப்பிட இக்கால ஒலிம்பிக்சு உதவியது. இங்கு கூடிய பார்வையாளர்களிடம் தங்கள் திறனை வெளிக்காட்டிட சிற்பிகளும் கவிஞர்களும் கூடியதால் கலைத்திறன் மிக்க போட்டிகளுக்கும் வழிவகுத்தது. ஒலிம்பியாவிலுள்ள சூசுவின் சிலை பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கியது.

பண்டைய ஒலிம்பிக்கில் தற்போதைய ஒலிம்பிக்கை விடக் குறைவான நிகழ்வுகளே இடம்பெற்றிருந்தன. கிரேக்கத்தில் பிறந்த ஆண்மக்களே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.[2] இருப்பினும் இரத ஓட்டப்போட்டியில் பிலிசிட்டீக் என்ற பெண்மணி வென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. நுழைவு விதிமுறைகளின்படியான நகர அரசுகள் மற்றும் மக்கெடோனியாவின் அனைத்து கிரேக்கரும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மக்கெடோனியாவின் முதலாம் அலெக்சாண்டர் தாம் கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று நிரூபித்த பின்னரே பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.[3][4] பண்டைய ஒலிம்பிக் போட்டிகள், தற்கால ஒலிம்பிக்கைப் போலன்றி, எப்போதுமே ஒலிம்பியாவில்தான் நடத்தப்பட்டது.[5]

மேற்சான்றுகள்

  1. "Ancient Olympic Games". Microsoft Encarta Online Encyclopedia 2006. Microsoft Corporation (1997-20-06). பார்த்த நாள் 2006-12-27.
  2. David Sansone, Ancient Greek civilization, Wiley-Blackwell, 2003, p.32
  3. Robert Malcolm Errington, A history of Macedonia, University of California Press, 1990, p.3
  4. Joseph Roisman, Ian Worthington, A Companion to Ancient Macedonia, Wiley-Blackwell, 2010, p.16
  5. "The Ancient Olympics". The Perseus Project. Tufts University. மூல முகவரியிலிருந்து 10 February 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-02-12.
Other Languages
한국어: 고대 올림픽
srpskohrvatski / српскохрватски: Drevne Olimpijske igre
Simple English: Ancient Olympic Games