தமிழ்ஒளி

தமிழ்ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 - 24 மார்ச்சு 1965) புதுவையில் பிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.[1] கவிதைகள் மட்டுமல்லாது கதைகள் கட்டுரைகள் இலக்கியத் திறனாய்வுகள் மேடை நாடகங்கள் குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். திராவிடர் கழகத் தொண்டராக இருந்து பிற்காலத்தில் பொதுவுடைமைத் தோழராக வளர்ந்தவர். 'தலித்து' என்று வழங்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் இழி நிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதினார்.

பிறப்பும் கல்வியும்

தென்னாற்காடு மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் சிற்றூரில் சின்னையா ,செங்கேணி அம்மாள் என்னும் இணையருக்குப் பிறந்தார். விசயரங்கம் என்பது தமிழ் ஒளியின் இயற்பெயர் ஆகும். பட்டுராசு என்றும் செல்லமாக அவரை அழைத்தனர். தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப் பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவரா யிருந்தபோதே பாரதியார்,பாரதிதாசன் கவிதைகளில் மனம் பறி கொடுத்தார். பாரதிதாசனின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது.[1] நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். தமிழ் ஒளி திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையை அம்மாநாட்டில் படித்தார்.[சான்று தேவை] பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார்.

Other Languages