| இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது.
மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும். அந்த கருமுட்டைகள் கருக்கட்டத் தேவையான ஆணினது விந்து கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் அம்முட்டைகளுடன் கருவறை சுவர்களும் சுத்திகரிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படும். இச்செயற்பாடே மாதவிடாய் எனப்படுகிறது. மாறாக ஆண் பெண் கலவியினால் சினை முட்டையுடன் ஆணின் விந்து இணையுமாயின் அங்கு கருத்தரிப்பு இடம்பெறுகிறது. ஆண் பெண் கலவியற்ற செயற்கை முறையாலும், அதாவது வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது செயற்கை விந்தூட்டல் மூலமும் பெண் கருத்தரிக்க முடியும்.
கருக்கட்டல் நிகழுமாயின் கருப்பையில் புதிய கருவணு தங்கியதும், இயக்குநீர் செயற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மாதவிடாய் ஏற்படல் தற்காலிகமாகத் தடைப்படும். மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். இறுதி மாதவிடாய் ஏற்பட்டு 14 நாட்களில் புதிய கருமுட்டை சூலகத்தில் இருந்து வெளிவரும். எனவே இறுதி மாதவிடாய் நிகழ்ந்து 14 நாட்களில், அதாவது 2 கிழமைகளில் கருக்கட்டல் நிகழ்வதற்கான சாத்தியம் ஏற்படுகின்றது. பெண்களில் கருக்கட்டல் நிகழ்ந்து 38 கிழமைகளில் பொதுவாக குழந்தை பிறப்பு நிகழும். எனவே மாதவிடாய் ஒழுங்காக நிகழும் பெண்களில், இறுதி மாதவிடாய் ஆரம்பித்த நாளில் இருந்து 40 கிழமைகளில் குழந்தை பிறப்பு நிகழும். இறுதி மாதவிடாய் வந்த காலத்தைக் கருத்தில் கொண்டே, குழந்தை பிறப்பதற்கான நாள் தீர்மானிக்கப்படுவதனால், இந்தக் காலமே, அதாவது 40 கிழமைகளே முழுமையான கருக்காலம் அல்லது கருத்தரிப்புக் காலம் எனக் கணக்கிடப்படுகின்றது.