கணிதத்தின் வரலாறு

யூக்ளிடின் கூறுகளின் சான்று;இந்நூல் எல்லா காலத்திற்கும் மிகவும் தாக்கமுள்ள பாடநூலாக பரவலாகக் கருதப்படுகிறது.[1]

கணிதத்தின் வரலாறு முதன்மையாக கணிதக் கண்டுபிடிப்புக்களின் துவக்கங்களை ஆய்வு செய்யும் கல்வியாகும். இது குறைந்தளவில், கணிதக் குறியீடுகளின் துவக்ககால வரலாற்றையும் ஆராய்கிறது. புதுமைக்காலத்திற்கு முன்பும் உலகளவில் அறிவு பரவும் முன்பும் புதிய கணித மேம்பாடுகள் எழுத்தில் வடிக்கப்பட்ட சான்றுகள் ஒருசில இடங்களிலேயே கிடைக்கின்றன.கி.மு 3000 முதலே மெசொப்பொத்தேமியா மாநிலங்களான சுமேரியா, அக்கது மற்றும் அசிரியாவிலும் பண்டைய எகிப்து ,எப்லா ஆகியவிடங்களில் எண்கணிதம், இயற்கணிதம், வடிவவியல் ஆகிய கணிதக் கூறுகள் வரிவிதிப்பு, வணிகம், வானியல் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தவிரவும் நாட்காட்டியை கணக்கிடவும் நேரத்தை பதிவு செய்யவும் இவை பயன்படுத்தப்பட்டன.

எண்களுடன் கூடிய பிளிம்ப்டன் 322 களிமண் பலகை - பபிலோனிய நாகரிகம்.

மெசொப்பொத்தேமியாவிலும் எகிப்திலும் மிகவும் தொன்மையான கணித நூல்கள் கிடைத்துள்ளன. காட்டுக்கள்: பிளிம்ப்டன் 322 என்ற களிமண் பலகை (பபிலோனியா c. 1900 கி.மு),[2] ரைன்ட் கணிதப் பப்பிரசு (எகிப்திய கணிதம், c. 2000–1800 கி.மு)[3] மற்றும் மாசுக்கோ கணித பப்பிரசு (எகிப்திய c. 1890 கி.மு). இவை அனைத்துமே பித்தகோரசு மும்மைகளைக் குறிப்பிடுகின்றன; எனவே அடிப்படை எண்கணிதத்தையும் வடிவவியலையும் அடுத்து பித்தேகோரசு தேற்றம் மிகவும் தொன்மையான, பரந்த கணித மேம்பாடாகத் தோன்றுகின்றது.

கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பித்தாகரசு மற்றும் அவரது சீடர்களால் மெய்ப்பிக்கும் இயல்வுடைய துறையாக கணிதம் குறித்த ஆய்வு தொடங்கியது; அவர்கள் கல்வியின் தலைப்பு எனப் பொருள்படும் பண்டைய கிரேக்க μάθημα (மாதேமா) என்ற சொல்லிலிருந்து "மேதமாடிக்சு" என்று பெயரிட்டனர்.[4] கிரேக்க கணிதம் கணக்கிடும் முறைகளை பெரிதும் திருத்தி (குறிப்பாக யூகிக்கும் ஏரணம், நிறுவல்களில் துல்லியம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி) கணித உள்ளுரையை விரிவுபடுத்தியது. [5]

உரோமானியர்கள் கோட்பாட்டுக் கணிதத்தில் பெரும்பங்களிக்கவில்லை எனினும் நில அளவியல், கட்டமைப்புப் பொறியியல், இயந்திரப் பொறியியல், கணக்குப் பதிவியல், சந்திர, சூரிய நாட்காட்டிகளை உருவாக்குதல் போன்றவற்றிலும் கைவினைப் பொருட்கள், கலைகளிலும் கூட, பயன்பாட்டுக் கணிதத்தை வெகுவாக பாவித்தனர். சீனர்கள் துவக்கத்திலிருந்தே பங்களித்து வந்துள்ளது; இடஞ்சார் குறியீடு, எதிர்ம எண்ணை முதலில் பயன்படுத்தியது சிலவாகும்.[6][7] இந்து-அரபு எண்ணுருக்களும், செயற்பாடுகளை பயன்படுத்தும் விதிகளும் உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றது; இவற்றை கி.பி முதல் ஆயிரவாண்டில் படிப்படியாக மேம்படுத்திய இந்தியக் கணிதம் பின்னர் முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மியின் ஆக்கங்கள் மூலமாக இசுலாமியர்கள் மேற்கத்திய பண்பாடுகளுக்குக் கொண்டுச் சென்றனர்.[8][9] இசுலாமிய கணிதவியலாளர்கள் தங்கள் முறைக்கு மேலும் மேம்படுத்தி விரிவுபடுத்தி இந்தப் பண்பாடுகள் அறியச் செய்தனர்.[10] இதே காலத்தில், ஆனால் இந்த வழமைகளுடன் தொடர்பின்றித் தனித்து மெக்சிக்கோவிலும் நடு அமெரிக்காவிலும் மாயா நாகரிகத்திலும் கணிதம் மேம்பட்டு வந்தது. குறிப்பாக 0 (எண்) கருதுகோள் ஏற்கப்பட்டு மாயா எண்களில் இதற்கான குறியீடு வழங்கப்பட்டிருந்தது.

12ஆம் நூற்றாண்டில் பல கிரேக்க மற்றும் அரபி நூல்கள் பின்னர் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன, இது இடைக்கால ஐரோப்பாவில் கணிதத்தை மேலும் மேம்படுத்துவதற்கு வழிவகுத்தது. தொன்மைக்காலங்களிலிருந்து பிந்தையக் காலங்கள் வரையிலும் கணிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட நூற்றாண்டுகளுக்கு அடுத்து சில நூற்றாண்டுகளில் எந்த முன்னேற்றமுமின்றி இருந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் இத்தாலி மறுமலர்ச்சிக்குப் பின்னர் இந்த வளர்ச்சி விரைவானது; புதிய கணித மேம்படுத்தல்களும் அவற்றால் அறிவியல் விளக்கங்களும் கூடியுள்ளது. இவற்றில் 17ஆம் நூற்றாண்டில் மீச்சிறு நுண்கணித மேம்பாட்டிற்கு ஐசாக் நியூட்டன், கோட்பிரீட் லைப்னிட்ஸ் ஆகியோரின் பங்களிப்பு முதன்மையானதாகும். 19ஆம் நூற்றாண்டு இறுதியில் அனைத்துலகக் கணித அறிஞர் பேரவை நிறுவப்பட்டது; இது இத்துறையின் மேம்பாட்டிற்காக தனது அளப்பரும் பங்கை ஆற்றிவருகின்றது.

Other Languages
Bahasa Indonesia: Sejarah matematika
日本語: 数学史
한국어: 수학사
Bahasa Melayu: Sejarah matematik
Simple English: History of mathematics
slovenščina: Zgodovina matematike
Basa Sunda: Sajarah matematik
Tiếng Việt: Lịch sử toán học
中文: 数学史